கூரியர் வாகனத்தில் கடத்திவரப்பட்ட 445 மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுச்சோியில் இருந்து சென்னைக்கு கூரியர் வாகனத்தில் 445 மதுபாட்டில்களை கடத்தி வந்த டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
திண்டிவனம்
மதுபாட்டில் கடத்தல்
புதுச்சேரியில் இருந்து தனியார் கூரியர் வாகனத்தில் சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டின் பறக்கும் படையினர் திண்டிவனம்-சென்னை புறவழிச்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் கூரியர் வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்த வாகனத்தில் உள்ள கண்டெய்னருக்குள் ஏராளமான அட்டை பெட்டிகள் இருந்தன. அதில் ஒரு பெட்டியை பிரித்து பார்த்தபோது புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 5-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் 445 மதுபாட்டில்கள் இருந்தன.
2 பேர் கைது
இதையடுத்து கூரியர் வாகனத்தில் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் புதுச்சேரி, குமரகுரு பள்ளம் பகுதியை சேர்ந்த அருளானந்தம்(வயது 50), திலகர் நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(47) என்பதும் வாகனத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் அதில் இருந்த கூரியர் தபால் மற்றும் பார்சல்களை வேறு வாகனத்தில் அனுப்பி வைத்து விட்டு மதுபாட்டில்களை சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்களுடன் கூரியர் வாகனத்தையும் பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளவழகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.