மருத்துவத்துறையில் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 308 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-10-26 21:02 GMT

திருச்சி,

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடமாடும் மருத்துவ வாகனங்கள்

எதிர்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 78 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அறிவித்தார். இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அத்துடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சுகாதாரப்பணிகளுக்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் ஒவ்வொரு துறையாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக கூறி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மருந்து இருப்பு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதற்கு எச் ஆர் மூலம் உரிய பதில் கிடைக்கும்.

புற்றுநோய் ஆராய்ச்சி மையம்

காஞ்சீபுரத்தில் சுமார் ரூ.300 கோடி செலவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது 6 லட்சத்து 90 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. முதல் டோஸ் தடுப்பூசி 96 சதவீதம் பேரும், 2-வது டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்