தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்த 43 பேர் கைது

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்த 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-11 10:58 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்த ஆலையை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாரம் தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி நேற்று தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்த 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் சுமார் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். சிலர் ஸ்டெர்லைட் ஆலை மீது வீண் வதந்திகளை பரப்பி ஆலையை மூட செய்து உள்ளனர். தற்போது அவைகளில் உண்மை இல்லை என்பது நிருபணமாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொழில் வளர்ச்சியை பெருக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முன்னிட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் தலைமையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்