தமிழ்நாட்டில் இதுவரை 43 பேர் தற்கொலை: உயிரை விழுங்கும் 'ஆன்லைன்' சூதாட்டம்தடை எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டில் இதுவரை ஆன் லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த 43 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், உயிரை விழுங்கும் ‘ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை எப்போது விதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-02-14 22:50 GMT

ஆன்லைன் என்று சொல்லப்படும் இணையதளத்தை பயன்படுத்துவது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது. அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் புத்திசாலிகள் ஆகிவிடுகிறார்கள். அதன் தீங்கு வலைகளில் சிக்கி விடுபவர்கள் இனிய உயிர்களை இழந்து போகிறார்கள்.

சூதாட்ட விளையாட்டுகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர்.

இந்த வகையான சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது? என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன.

தொடரும் தற்கொலைகள்

கடந்த வாரத்தில்கூட மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் குணசீலன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், சேலம் மாவட்டம் ஆத்தூர், உடையார்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு என்பவரும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இதுவரை 43 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசையை தூண்டி, விளையாட வைத்து, பணத்தை இழப்பதோடு, உயிரை மாய்க்க வைக்கும் இதுபோன்ற சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணமே இருக்கின்றன.

தடை சட்ட மசோதா

அரசும் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வந்த நிலையில், அதனை சென்னை ஐகோர்ட்டு வாயிலாக சூதாட்ட நிறுவனங்கள் உடைத்தது. அதன்பின்னர், கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் மீண்டும் இதற்கான தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு புதிதாக ஒரு சட்டம் இயற்ற பரிந்துரை அளித்தது.

அதனை அடிப்படையாக கொண்டு, பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். பின்னர், தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஒப்புதல் எப்போது?

இந்த புதிய சட்டப்படி, தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் தனிநபருக்கு 3 மாத சிறை தண்டனையும், அந்த சூதாட்ட நிறுவனத்தின் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு, கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அரசு தரப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கவர்னரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளார். இந்த சட்ட மசோதாவுக்கு விரைந்து கவர்னர் ஒப்புதல் கொடுத்து, சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

விழிப்புணர்வு அவசியம்

சென்னை மனநல ஆலோசகர் டாக்டர் வந்தனா:-

சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனதளவில் சோர்வடைபவர்களின் கடைசி கட்டம்தான் தற்கொலை. அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் உடனடியாக மனநல ஆலோசகர்களை அணுகுவது அவசியம். அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? என்பதை பார்த்து அதற்கேற்றபடி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

மருந்து, மாத்திரைகளினால் சிலரையும், ஆலோசனைகள் மூலம் சிலரையும் சூதாட்ட அடிமையில் இருந்து வெளியில் கொண்டுவரலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான முழு முயற்சிகளை அரசு கண்டிப்பாக எடுக்க வேண்டும். இந்த வகை சூதாட்டத்தில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுவதாக நினைக்கிறோம். ஆனால் இந்த விளையாட்டை எளிதில் அணுக முடியும் என்பதால், பெண்களும் இதில் அதிகம் விளையாடுகிறார்கள். அதிலும் இளம் தலைமுறையினர்தான் ஈடுபடுகிறார்கள். சூதாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதைவிட, அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பதை ஆராய வேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியமான ஒன்று.

வேதனை அளிக்கிறது

சேலம் ஜட்ஜ் ரோடு பிரகாசம் நகரை சேர்ந்த மணிகண்டன்:-

ஆன்லைன் சூதாட்டம் பல குடும்பத்தில் எமனாக நிற்கிறது. பணம் இழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. போலீஸ்காரர் ஒருவரே தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் இளைய தலைமுறைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய விபரீதத்தை நாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். பலரும் சூதாட்டத்தில் பணத்தை இழப்பதால், தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசு அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்கிறார் என்பது புரியவில்லை.

ஒப்புதல் வழங்க வேண்டும்

சேலத்தை சேர்ந்த வக்கீல் செல்வக்குமார்:-

ஆன்லைன் சூதாட்டத்தால் நிறைய இளைஞர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள். குறிப்பாக படித்தவர்களே அதிகமாக விளையாடுகின்றனர். போதை பொருளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர் தண்டனை முடிந்து வெளியே வந்துவிடுவார். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் நிறைய உயிரிழப்புகள் தொடரும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் போதை போன்று மாறிவிட்டன. இதை ஒழித்துக்கட்ட வேண்டும். இதனை உணர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடைக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

கடுமையான சட்டங்கள்

மல்லூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்மணி:-

தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளனர். முதலில் அவர்கள் பொழுது போக்கிற்காக ஆன்லைனில் பணம் இல்லாமல் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். பிறகு முழுவதும் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணம் வைத்து சூதாடுகின்றனர். பின்னர் சிறிது காலத்தில் வேலைக்கு எங்கும் செல்லாமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட தொடங்குகிறார்கள். ஒரே இடத்தில் 4 பேர் ஒன்றுகூடி பணம் வைத்து சூதாடினாலே போலீசார் அவர்களை கைது செய்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் எதிர்கால இளைய சமுதாயத்தை பாதுகாக்க முடியும்.

குடும்பத்தை காக்கவேண்டும்

கிச்சிப்பாளையத்தை சேர்ந்த செல்வக்குமார்:-

ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுபவர்கள் பணத்தை இழக்கிறார்கள், அல்லது உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இதனால் பல குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துவிட்டன. இளைஞர்கள் தங்களது குடும்பத்தை காக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு போர்க்கால அடிப்படையில் தடை விதிக்க கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், தமிழக இளைஞர்களின் நலன் கருதி நடிகர்களும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கடந்து வந்த பாதை...

* 2020 நவம்பர் 21: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் இயற்றப்பட்டது.

* 2021 ஆகஸ்டு 3: இந்த தடை சட்டத்தை எதிர்த்து, சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

* 2021 நவம்பர் 13: சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

* 2022 ஜூன் 10: ஆன்லைன் சூதாட்டத்துக்கு மீண்டும் தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அரசு குழு அமைத்தது.

* 2022 ஜூன் 27: குழு அறிக்கை தாக்கல் செய்ததோடு, புதிதாக ஒரு சட்டம் இயற்ற பரிந்துரைத்தது.

* 2022 ஆகஸ்டு 26: சட்டம் இயற்றுவது தொடர்பாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

* 2022 செப்டம்பர் 26: தமிழக அமைச்சரவை கூட்டம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

* 2022 அக்டோபர் 1: அவசர சட்டத்துக்கு கவர்னரும் ஒப்புதல் வழங்கினார்.

* 2022 அக்டோபர் 7: அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

* 2022 அக்டோபர் 19: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

* 2022 அக்டோபர் 28: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கேட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்