கேரள வியாபாரிகளின் போட்டியால், ஒரே நாளில் 420 ரூபாய் உயர்ந்து சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,415-க்கு ஏலம்
கேரள வியாபாரிகளின் போட்டி காரணமாக ஒரே நாளில் 420 ரூபாய் உயர்ந்து சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 415-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்
கேரள வியாபாரிகளின் போட்டி காரணமாக ஒரே நாளில் 420 ரூபாய் உயர்ந்து சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 415-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூக்கள் மார்க்கெட்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர், கொத்தமங்கலம், புதுப்பீர்கடவு, பண்ணாரி, பெரியகுளம், சிவியார்பாளையம், டி.ஜி.புதூர், கே.என்.பாளையம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் விளைந்த பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கர்நாடக மாநிலம் ைமசூரு, பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து ஏலத்தில் கலந்து கொண்டு பூக்களை வாங்கி செல்வார்கள். இங்கு வாங்கப்படும் பூக்கள் கோவை மற்றும் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் அமெரிக்கா, துபாய், ஷார்ஜா உள்பட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏலம்
வழக்கம்போல் நேற்று காலை 7 மணிக்கு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இந்த பூக்களை ஏலம் எடுக்க ஈரோடு, கோவை, பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்திருந்தனர். குறிப்பாக கேரள வியாபாரிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 415-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.1,200-க்கும், செண்டுமல்லி ரூ.48-க்கும், பட்டுப்பூ ரூ.105-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,995-க்கும், முல்லை ரூ.1,880-க்கும், காக்கடா ரூ.925-க்கும், செண்டுமல்லி ரூ.64-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.360-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை ஆனது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.420-ம், ரூ.275-ம், கனகாம்பரம் ரூ.40-ம் என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் மல்லிகைப்பூ விலை கிலோவுக்கு ரூ.420 உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ வரத்து குறைந்து இருந்தது. அதே வேளையில் மல்லிகைப்பூவுக்கு தேவை அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக கேரள மாநில வியாபாரிகளுக்கு மல்லிகைப்பூ அதிக அளவில் தேவைப்பட்டது. இதனால் கேரள மாநில வியாபாரிகள் போட்டி போட்டு மல்லிகைப்பூவை எடுத்தனர். இதன்காரணமாக மல்லிகைப்பூ விலை உயர்ந்தது,' என்றனர்.