400 ஆண்டுகள் பழமையான வீரக்கல் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை அருகே 400 ஆண்டுகள் பழமையான வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-03-26 19:07 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே 400 ஆண்டுகள் பழமையான வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது.

வீரத்தை போற்றும் சிற்பம்

அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கிராமத்தில் ஒரு பழமையான சிற்பம் இருப்பதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியை சேர்ந்த வரலாற்றுத்துறை மாணவன் ஜோஸ்வா கொடுத்த தகவலின் படி அக்கல்லூரியின் வரலாற்று துறை உதவிப்பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய கள ஆய்வாளருமான ரமேஷ் அப்பகுதிக்கு சென்று கள ஆய்வு செய்தார். அப்போது அந்த சிற்பம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரத்தை போற்றும் வீரக்கல் சிற்பம் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட ஒரு பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் உள்ள வீரனின் வலது கையில் ஒரு வாள் தூக்கிப் பிடித்த படியும், இடது கையில் ஒரு ஆயுதத்தை பிடித்த படியும் உள்ளது.

400 ஆண்டுகள்

2 கால்களிலும் வீரக்கழலை அணிந்தபடியும், மார்பில் ஆபரணங்களுடனும், இடையில் இடைக்கச்சை, குறுவாள் அணிந்தபடியும் தலையில் சரிந்த கொண்டையுடன் சிற்பம் கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது.

வீரனின் தலைக்கு மேல் நாசிக்கூடு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரனின் வலது காலின் ஓரமாக ஒரு போர்வாள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை பார்க்கும் பொழுது ஒரு போர் வீரனைப்போற்றும் விதமாக வீரக்கல் எடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

இந்த சிற்பத்தின் அமைப்பை வைத்து பார்க்கும் போது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாயக்கர் கால வீரக்கல் சிற்பமாக கருதலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்