இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
400 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக ஒரு கும்பல் ஆந்திராவுக்கு சென்றது. அங்கிருந்து கஞ்சா வாங்கி கொண்டு ஒரு சரக்கு வாகனத்தில் ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக ராமநாதபுரத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
இதற்கிடையே ஒரு கும்பல் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஆந்திர போலீசார் அந்த சரக்கு வாகனத்தை பின்தொடர்ந்து வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே வந்த போது ஆந்திர மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சரக்கு வாகனத்தில் இருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
இது தொடர்பாக சரக்கு வாகனத்தில் வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு ஆந்திர போலீசார் கைதான 4 பேரையும் அழைத்து சென்றனர். அதோடு பறிமுதல் செய்த 400 கிலோ கஞ்சாவையும் அதே சரக்கு வாகனத்தில் ஆந்திராவுக்கு ஓட்டி சென்றனர்.
இந்த கஞ்சா கடத்தலில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை பிடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே 400 கிலோ கஞ்சா பிடிபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.