40 ஆண்டுகால பாசன பிரச்சினைக்கு தீர்வு

Update: 2023-10-14 17:24 GMT


மடத்துக்குளம் அருகே 40 ஆண்டுகாலமாக நீடித்து வந்த பாசனப் பிரச்சினைக்கு ஆர்.டி.ஓ. மூலம் தீர்வு கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிளை வாய்க்கால்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீராதாரமாக அமராவதி அணை உள்ளது. அணையிலிருந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியாக பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பாசனத்துக்கு வாய்க்கால் அமைக்கப்பட்டும் நீர் பெறமுடியாத நிலையில் 40 ஆண்டுகாலமாக தவித்து வந்த விவசாயிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மடத்துக்குளத்தையடுத்த துங்காவிக்கு அருகில் அமராவதி 22/6 கிளை வாய்க்கால் உள்ளது.அதில் 1984-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு அமராவதி நீர்வளத்துறையால் வாய்க்கால் வெட்டப்பட்டது.ஆனால் நில ஒப்படைப்பு பூர்த்தியடையாத நிலையில் வாய்க்காலில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 40 ஆண்டுகளாக பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

புகார்

40 ஆண்டுகால பாசன பிரச்சினை குறித்து உடுமலை ஆர்டிஓ ஜஸ்வந்த் கண்ணனிடம் விவசாயிகள் புகாரளித்தனர்.உடனடியாக பல்வேறு தடைகளுக்கு இடையில் நில அளவை உள்ளிட்ட பணிகளை ஆர்டிஓ ஜஸ்வந்த் கண்ணன் செய்து முடித்தார். அந்த பகுதியில் பாசன வாய்க்காலை ஒட்டி உள்ள மரங்களை அகற்றுவதற்கு எழுந்த எதிர்ப்பையும் தீர்த்து வைத்தார். நேற்று ஆர்டிஓ ஜஸ்வந்த் கண்ணன், மடத்துக்குளம் தாசில்தார் செல்வி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத மடைகளை உடனடியாக அகற்றவும், பாசனத்துக்கான அரணி வாய்க்காலை அமைத்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 40 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்