மேம்பால பணிக்காக 40 கடைகள் இடித்து அகற்றம்

மேம்பால பணிக்காக 40 கடைகள் இடித்து அகற்றம்

Update: 2023-08-08 18:45 GMT

கோவை

மேம்பால பணிக்காக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் 40 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உக்கடம் மேம்பால பணிகள்

கோவை உக்கடத்தில் இறுதிக்கட்ட மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இதற்காக ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்துக்கான இறங்குதளம், மற்றும் ஏறுதளம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகளும் நடக்கிறது.

இதில் ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கு திரும்பும் சாலையில் இடப்புறத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அவர்கள் முற்றுகையிட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் போக்குவரத்து ஒருவழிப்பாதை வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் உக்கடம் ஆத்துப்பாலம் இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். முற்றுகையிட்டவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மணிவண்ணன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகளை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று 40 கடைகள்இடித்து அகற்றப்பட்டன. மேம்பால பணிகள் தொய்வின்றி நடைபெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனங்கள் சிக்கின

இந்த நிலையில் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மாற்று சாலையான நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் சென்றன. சாலையில் சரிவர மூடப்படாத பள்ளத்தில் அரசு பஸ் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகனங்கள் சிக்கி கொண்டன. இதனால் நஞ்சுண்டாபுரம் சாலையிலும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்துசீரானது.

Tags:    

மேலும் செய்திகள்