தேனீக்கள் கொட்டி 40 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே இ்றந்தவரின் இறுதி சடங்கிற்கு சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நலம் விசாரித்தார்.
தேனீக்கள் கொட்டியது
திருப்பத்தூர் தாலுகா மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று ராச்சமங்கலம் அடுத்த பசலி குட்டை கிராமத்தில் இறந்த உறவினருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு பரந்து வந்த தேனீக்கள் கூட்டம் ஈமச்சடங்கிற்கு வந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டியது.
இதனால் அவர்கள் நாலாபுறமும் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் சுமார் 40-க்கும் மேற்பட்டடோர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தனர். இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் நலம் விசாரித்தார்
காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்தும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் நலம் விசாரித்து, தேனீக்கள் கொட்டியது குறித்து விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.