பத்மநாபபுரத்தில்அட்டகாசம் செய்த 40 குரங்குகள் சிக்கின

பத்மநாபபுரத்தில் அட்டகாசம் செய்த 40 குரங்குகளை வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்.

Update: 2022-10-28 18:45 GMT

தக்கலை:

பத்மநாபபுரத்தில் அட்டகாசம் செய்த 40 குரங்குகளை வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்.

அட்டகாசம்

தக்கலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையான வேளிமலையில் அடர்ந்த காடுகளில் இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்த குரங்குகள் தற்போது அங்கு போதிய உணவுகள் கிடைக்காததால் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

வீடு புகுந்து உணவு, தின்பண்டங்களையும் எடுத்துச் செல்வதோடு குழந்தைகளையும் அச்சுறுத்தியது. குரங்குகளின் அட்டகாசத்தால் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் அதிகமாக இருந்தது.

40 குரங்குகள் பிடிபட்டன

இந்தநிலையில் ஆய்வுக்கு வந்த போது அமைச்சர் மனோ தங்கராஜிடம் அப்பகுதியை சேர்ந்த ஊர் பிரமுகர்கள் குரங்குகள் தொல்லை குறித்து முறையிட்டனர்.

இதனையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலரை தொடர்பு கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்கு தொல்லையை ஏற்படுத்தும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடும்படி தெரிவித்தார்.

பிறகு வனத்துறை சார்பில் பத்மநாபபுரத்தில் 3 அறைகளை கொண்ட பெரிய இரும்பு கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டுக்குள் உணவும் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஆசையுடன் உணவை சாப்பிட சென்ற 40 குரங்குகள் அந்த கூண்டுக்குள் சிக்கி கொண்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து பத்மநாபபுரம் நகராட்சி வாகனம் மூலம் கூண்டில் சிக்கிய குரங்குகளை களியல் அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பான இடங்களில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்