வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி-வட மாநில நபருக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் என்பவர் அறிமுகமானார். ரூ.5 லட்சம் கொடுத்தால் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குணால் தாஸ் விஜயகுமாரிடம் கூறியுள்ளார். இதை நம்பி விஜயகுமார் உள்ளிட்ட 8 பேர் குணால் தாசிடம் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.40 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் குணால் தாஸ் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இது தொடர்பாக கேட்ட பிறகு, சிலரை துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்று அவர்கள், வேலை தொடர்பான ஆவணங்களை காண்பித்தபோது அவை போலியானவை என தெரியவந்தது. இதனால் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து விஜயகுமார் உள்ளிட்ட 3 பேர் தர்மபுரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.