4 வாலிபருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை

4 வாலிபருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை

Update: 2023-01-25 20:11 GMT

சவ ஊர்வலத்தில் சாதி பெயரை சொல்லி தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 4 வாலிபருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் பிள்ளை என்பவர் கடந்த 4-6-2019-ந்தேதி இறந்து விட்டார். அவருடைய சவ ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது பெருகவாழ்ந்தான் அண்ணாநகரை சேர்ந்த கலியமூர்த்திக்கும், பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் சீதாபதி (22), கார்த்தி மகன் சந்தோஷ் (21), கமலநாதன் மகன் சூர்யா (23), சரவணன் மகன் மணிகண்டன் (21) ஆகிய 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் 4 பேரும் சேர்ந்து கலியமூர்த்தியை சாதி பெயரை சொல்லி தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கலியமூர்த்தியும், மற்ற 4 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

4 ஆண்டுகள் சிறை

இது தொடர்பாக கலியமூர்த்தி பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதாபதி, சந்தோஷ், சூர்யா, மணிகண்டன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி எஸ்.ரவி விசாரித்து 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சுனன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்