கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-06-08 18:45 GMT


கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

வெல்டிங் தொழிலாளி

மயிலாடுதுறை அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). மயிலாடுதுறை ஆரோக்கியநாத புரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர்கள் இருவரும் வெல்டிங் தொழில் செய்து வருகின்றனர். கார்த்திகேயனுக்கும், பாண்டியனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்தேதி கார்த்திகேயன், பாண்டியனை இரும்பு பைப்பால் அடித்து தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பாண்டியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

4 ஆண்டு சிறை

பின்னர் கார்த்திகேயன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று முதன்மை உதவி அமர்வு நீதிபதி கவிதா தீர்ப்பு வழங்கினார்.

அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கார்த்திகேயனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து கார்த்திகேயனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் சிவதாஸ் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்