4 வீடுகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
கெட்டுப்போன ரேஷன் அரிசியால் ஆத்திரம் அடைந்த காட்டு யானைகள், சிங்கோனா எஸ்டேட் பகுதியில் 4 வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
கெட்டுப்போன ரேஷன் அரிசியால் ஆத்திரம் அடைந்த காட்டு யானைகள், சிங்கோனா எஸ்டேட் பகுதியில் 4 வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கெட்டுப்போன ரேஷன் அரிசி
வால்பாறையில் டேன்டீ நிர்வாகத்திற்கு சொந்தமான சிங்கோனா எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்த பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வீடுகள் காலியாக உள்ளது.
இந்த நிலையில் அங்கு குறைந்த எண்ணிக்கையில் வசித்து வரும் தொழிலாளர்கள், காலியாக உள்ள வீடுகளை பயன்படுத்துவதற்காக சுத்தம் செய்தனர். அப்போது வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது பயன்பாட்டிற்காக வாங்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை விட்டு சென்றது தெரியவந்தது.
வீடுகளை உடைத்தன
கெட்டுப்போன நிலையில் இருந்த அந்த ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் எடுத்து வனப்பகுதியின் ஓரங்களிலும், தேயிலை தோட்ட பகுதியிலும் கொட்டினர்.
இதற்கிடையில் அந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள நீரார் அணை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தது. பின்னர் அங்கிருந்து குட்டியுடன் 4 காட்டுயானைகள் கொண்ட கூட்டம், நேற்று அதிகாலை 3 மணியளவில் சிங்கோனா எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி வழியாக நடந்து சென்றது. பின்னர் அங்கு கொட்டி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை தின்பதற்காக சென்றன. ஆனால் கெட்டுப்போன நிலையில் இருந்ததால், அதை சாப்பிடவில்லை. மேலும் ஆத்திரம் அடைந்து அருகில் உள்ள 4 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்தன. தொடர்ந்து அங்கிருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்து தின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிர ரோந்து
இந்த சமயத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அக்கம்பக்கத்து வீடுகளில் தஞ்சம் புகுந்து உயிர் பிழைத்தனர். மேலும் மானாம்பள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து கூச்சலிட்டும், அதிக சத்தத்துடன் டி.வி.யை இயக்கியும் யானைகளை விரட்ட முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.