ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேன் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேன் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
வாணியம்பாடி அருகே உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில், வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய் துறையினர் மதனாஞ்சேரியை அடுத்த குறவன் வட்டம் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதேபோல், வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் தலைமையில் போலீசார் வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் வழியில் மாதகடப்பா பகுதியில் உள்ள அண்ணாநகர் சோதனை சாவடியில் வாகனத் தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 61 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டி வந்த திகுவாபாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் கணபதி (30) மற்றும் உரிமையாளர் குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஆந்திராவுக்கு அரிசி கடத்துவது தெரிய வந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி ரேஷன் அரிசி ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு கடத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.