வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 4 கழிவறைகள் ரூ.68 லட்சத்துக்கு ஏலம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 4 கழிவறைகள் ரூ.68 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

Update: 2022-11-18 16:08 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 4 கழிவறைகள் ரூ.68 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

வேலூர் புதிய பஸ் நிலையம்

வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, சித்தூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அங்கு கடைகள் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். கட்டப்பட்டுள்ள சுமார் 80 கடைகளை வாடகைக்கு எடுப்பதில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையும் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைத்தனர். சில கழிவறைகள் திறக்கப்படாமல் இருந்ததால் பலர் ஆங்காங்கே சிறுநீர் கழித்து வந்தனர்.

இந்தநிலையில் பஸ் நிலையத்தில் உள்ள தரைதளத்தில் 4 இடங்களில் குளியல்அறைகளுடன் கூடிய கழிவறைகளும், முதல் தளத்தில் 2 இடங்களில் கழிவறைகளும் நேற்று ஏலம் விடப்பட்டன.

ரூ.68 லட்சத்துக்கு...

அதில் தரைதளத்தில் உள்ள 4 இடங்களில் உள்ள கழிவறைகள் மட்டும் ரூ.68 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உள்ள கழிவறை மட்டும் ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போனதாக தெரிகிறது.

இதன்மூலம் ஆண்டுக்கு மாநகராட்சிக்கு ரூ.68 லட்சம் வருமானம் கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். மேலும், அவர்கள் கூறுகையில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளும், முதல் தளத்தில் உள்ள கழிவறைகளும் விரைவில் ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்