திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு தயார் நிலையிலுள்ள கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான வார்டுகளையும், கொரோனா சிகிச்சைக்காக பெறப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும், நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் விதமாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஏற்கனவே கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவாக இருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு 20 முதல் 25 எண்ணிக்கையில் வந்துள்ளது. ஆனால் தற்போது தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 200 வரை அதிகரித்து வருகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசு சார்பாகவும், மருத்துவத்துறை சார்பாகவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மிகவும் சிறப்பாக தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாவட்டம் திருவள்ளூர் ஆகும். 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே பூஸ்டர் தடுப்பூசி யார் யாரெல்லாம் செலுத்தி கொள்ளவில்லையோ அவர்கள் அனைவரும் உடனடியாக செலுத்தி கொள்ள வேண்டும். என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது. அனைத்து நாட்களிலும் அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ, அல்லது அரசு ஆஸ்பத்திரியிலோ செலுத்தி கொள்ளலாம். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக 1,379 ஆக்சிஜன் படுக்கைகளும், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் 2,368 படுக்கைகளும், அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 253 என அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக மொத்தம் 4 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.