தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-07-10 16:59 GMT

காவேரிப்பட்டணம்

தனியார் நிறுவன ஊழியர்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுட்டஅள்ளியை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் சூளகிரியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த குமார் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

சூளகிரி அருகே உள்ள மல்லசந்திரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (37). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவர் கடந்த 5-ந் தேதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்த சோகம்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்தவர் அனுமந்தப்பா. இவருடைய மகன் ஆஞ்சயன் (32). கூலித்தொழிலாளி. இவரது தந்தை அனுமந்தப்பா கடந்த 5-ந்் தேதி உயிரிழந்தார். தந்தை இறந்த துக்கத்தில் இருந்த ஆஞ்சயன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த சிறிது நாட்களில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தூக்குப்போட்டு தற்கொலை

சூளகிரி அருகே உள்ள அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (55) கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட இவர் நேற்று முன்தினம் பெல்லட்டியில் உள்ள தனியார் நிலத்தில் இருந்த பலா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்