ஒரே மோட்டார் சைக்கிளில் 4 மாணவர்கள் பயணம்; கார் மோதி அண்ணன்-தம்பி பலி

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 மாணவர்கள் விபத்தில் சிக்கியதில் அண்ணன், தம்பி பலியானார்கள்.

Update: 2023-06-26 19:26 GMT

காளையார்கோவில்,

ஒரே மோட்டார்சைக்கிளில் சென்ற 4 மாணவர்கள் விபத்தில் சிக்கினா். கார் மோதியதில், அண்ணன், தம்பி பலியானார்கள். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சகோதரர்கள்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே என்.மணக்குடியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிரமம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன்கள் சூரிய பிரசாத் (வயது 16), உதய பிரசாத் (14). இவர்கள் இருவரும் கொல்லங்குடி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்கள் நேற்று பள்ளி முடிந்ததும் தனது பள்ளிக்கூட நண்பர்களான கொல்லங்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மிஸ்சில் பாண்டி (16), கவுரிப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் மகன் கார்த்திகேயன் (16) ஆகியோரை கொல்லங்குடியில் இறக்கி விடுவதற்காக 4 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

கார் மோதி 2 பேர் பலி

கொல்லங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சென்றபோது எதிரே வந்த கார், அந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சூரிய பிரசாத் மற்றும் இவருடைய தம்பி உதய பிரசாத் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிஸ்சில் பாண்டி மற்றும் கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த மானாமதுரையை சேர்ந்த லூர்துராஜ்(67) என்பவர் மீது காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விபத்தில் பலியான மகன்களின் உடல்களை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்