ஊருக்குள் வராததால் பொதுமக்கள் ஆத்திரம்மல்லூரில் 4 தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு

மல்லூரில் ஊருக்குள் வராததால் ஆத்திரம் அடைந்த 4 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2022-12-30 20:57 GMT

பனமரத்துப்பட்டி,

மல்லூர்

சேலத்தில் இருந்து மல்லூர் வழியாக ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் பஸ்கள் மல்லூர் ஊருக்குள் வராமல், புறவழிச்சாலை வழியாக செல்ல தொடங்கின.

இதனால் மல்லூர் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதன் காரணமாக மல்லூர் வழியாக பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்று பஸ்களை சிறைபிடித்து அடிக்கடி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

4 பஸ்கள் சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை அய்யனார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மல்லூர் பைபாஸ் பிரிவு பகுதிக்கு சென்றனர். அங்கு மல்லூர் டவுன் பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற 4 தனியார் பஸ்களை அவர்கள் தனித்தனியாக சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பீரண்டு தையல்நாயகி, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அம்சவள்ளி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சி துணைத்தலைவர் வேங்கை அய்யனார் சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் பஸ்சில் ஏறும் போதே மல்லூர் ஊருக்குள் பஸ் செல்லாது யாரும் ஏற வேண்டாம் என கண்டக்டர்கள் கூறுகின்றனர். அதையும் மீறி ஏறினால் மல்லூர் பிரிவு பைபாசில், பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு விடுகின்றனர். பெண்கள் வேலைக்கு சென்று விட்டு வரும்போது இரவு நேரங்களில் கூட பைபாஸிலேயே இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிப்படைக்கிறோம் என கூறினார்.

உறுதி

இதையடுத்து அனைத்து பஸ்களும் ஊருக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருடன் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிறைபிடித்த தனியார் பஸ்களை விடுவித்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்