சத்துணவு ஊழியர் வீட்டில் 4 பவுன் நகை-ரூ.30 ஆயிரம் திருட்டு
சத்துணவு ஊழியர் வீட்டில் 4 பவுன் நகை-ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
சத்துணவு ஊழியர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி சசிகலா (வயது 37). இவர் தழுதாழை அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். சிவசுப்பிரமணியன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து சசிகலா தனது மகளுடன் அ.மேட்டூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சசிகலா தனது வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது தாயார் சித்ரா வீட்டில் மகளுடன் தங்கியுள்ளார்.
நகை-பணம் திருட்டு
பின்னர் நேற்று காலை அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ெபாருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தோடுகள், 2 பவுன் சங்கிலி, வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அரும்பாவூர் போலீசில் சசிகலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.