அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் 16 லட்சம் அரசு பணியாளர்கள் பயன் அடைவார்கள்.

Update: 2023-10-25 18:51 GMT

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் 2 முறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை கடந்த மே 17-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.

அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அவர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அப்போது 3 மாத நிலுவையை அரசு வழங்கவில்லை.

அரசு ஊழியர்கள் கோரிக்கை

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்த பிறகு, தமிழக அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீத உயர்வை வழங்குவதாக மத்திய மந்திரி சபை கடந்த 18-ந் தேதி முடிவு எடுத்து இருந்தது.

அதைத்தொடர்ந்து பல்வேறு தமிழக அரசு ஊழியர் சங்கங்கள், மத்திய அரசு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவை இன்றி வழங்குவதாக அறிவித்து உள்ளதால், தமிழக அரசும் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தன.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற, முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

16 லட்சம் பேருக்கு பயன்

அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்-அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தும் என்று ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,546.16 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். என்றாலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அரசாணை

இந்த அறிவிப்புக்கான அரசாணையை நிதித்துறை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடும். கடந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட வேண்டிய அகவிலைப்படியை ஓய்வூதியம் அளிக்கும் அலுவலர்கள் கணக்கிட வேண்டும். அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்ததை முன்னிட்டு முதல்-அமைச்சருக்கு பல்வேறு சங்கத்தினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் பீட்டர் அந்தோணிசாமி, அமிர்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் அருள் சங்கு, பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் ராமஜெயம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழக மாநில தலைவர் மு.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்