வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 4 ேபர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 4 பேர் இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 4 பேர் இறந்தனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தார்
திருச்சி வயலூர் சாலை இரட்டை வாய்க்கால் முல்லைநகரை சேர்ந்தவர் சம்பந்தமூர்த்தி (வயது 82). இவர் கடந்த 17-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, புத்தூர் ஹைரோடு மந்தைசாலை பகுதியில் உள்ள வேகத் தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
திருச்சி, சுப்பிரமணியபுரம், ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (55). இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். மது போதைக்கு அடிமையான இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வேலைக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் கடையில் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்த அவரை கடையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் பிணம்
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பஸ்நிறுத்தம் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அரியமங்கலம் கிராமநிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.
கார் மோதி பலி
திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (73). இவர் நேற்று காலை திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் குண்டூர் அய்யம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை நியூ தில்லைநகரை சேர்ந்த ராம் காந்த் மகன் தாரகேஷ் (25) என்பவரை கைது செய்தனர்.