அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம்

சின்னசேலம் அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-09-13 18:20 GMT

சின்னசேலம்

அரசு நடுநிலைப்பள்ளி

சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 270-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு போதிய இடவசதி இல்லாததால் பழுதடைந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

நேற்று மதியம் 6-ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த போது கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

4 பேர் படுகாயம்

சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் அதே ஊரை சேர்ந்த சங்கர் மகன் பரத் (வயது 11), நாராயணன் மகள் சுஷ்மிதா(11), சின்னசாமி மகள் மதுமிதா(11) முத்துகருப்பன் மகள் சிம்ரன்(11) ஆகிய 4 பேருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை சக மாணவர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக நயினார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மாணவர் பரத் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாரிகள் விசாரணை

இந்த சம்பவத்தை அறிந்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், வட்டார கல்வி அலுவலர் தனபால் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்த வகுப்பறையை பார்வையிட்டு மாணவர்களிடம் விசாரித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்