வாலிபர் கொலையில் 4 பேர் கைது

வடக்கன்குளம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-17 19:42 GMT

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த யாக்கோபுரத்தைச் சேர்ந்தவர்கள் செல்வன் (வயது 32), ஜெபகுமார். கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் யாக்கோபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்மகும்பல் வந்தது. அவர்களைப் பார்த்ததும் ஜெபக்குமார் தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே செல்வனை சுற்றி வளைத்த மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது.

செல்போனில் அவதூறாக பேசியதால்...

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த செல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது செல்வன், ஜெபகுமார் ஆகியோருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே செல்போனில் அவதூறாக பேசியது தொடர்பாக முன்விேராதம் இருந்ததும், இதில் செல்வன், ஜெபகுமார் ஆகியோரை அந்த நபர்கள் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு வந்ததும், ஜெபகுமார் தப்பி ஓடியதால் செல்வனை வெட்டிக்கொலை செய்ததும் தெரிய வந்தது.

4 பேர் கைது

இதுதொடர்பாக யாக்கோபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பேரின்பராஜ் (32), பாலகிருஷ்ணன் மகன் ராஜா (30), ராமசாமி (63), கிருஷ்ணமூர்த்தி மகன் நாகராஜன் (30) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான பாலசுபின் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்