கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4
குவைத்தில், ஓட்டகம் மேய்க்க மறுத்ததால் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் விமானம் மூலம் இன்று(வெள்ளிக்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடக்கிறது.
கூத்தாநல்லூர்:
குவைத்தில், ஓட்டகம் மேய்க்க மறுத்ததால் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் விமானம் மூலம் இன்று(வெள்ளிக்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடக்கிறது.
ஒட்டகம் மேய்க்க மறுப்பு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி-கொரடாச்சேரி மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 40). காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர் வியாபாரம் கைகொடுக்காததால் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ரூ.1½ லட்சம் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டு மூலம் கடந்த 3-ந் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
அங்கு தனக்கு கிளா்க் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துச்சென்ற முத்துக்குமரனுக்கு பயங்கர அதிர்ச்சி காத்து இருந்தது. அவரை வேலைக்கு அமர்த்திய முதலாளி ஒட்டகம் மேய்க்குமாறு கூறியுள்ளார். அதற்கு முத்துக்குமார், ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்ய தனக்கு கஷ்டமாக உள்ளதாகவும், இதனால் தனது சொந்த ஊருக்கு தான் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
சுட்டுக்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முதலாளி, முத்துக்குமரனை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் முத்துக்குமரன் ஊருக்கு திரும்புவதற்காக முயற்சி செய்து உள்ளார். இதை அறிந்த அந்த முதலாளி முத்துக்குமரனை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த ஒரு வார காலமாக கூத்தாநல்லூர் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. முத்துக்குமரனின் படுகொலைக்கு நீதி கேட்டும், இதற்கு காரணமாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர்.
4 பேர் கைது
இந்த நிலையில் குவைத்தில் முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குவைத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன், ஆந்திராவை சேர்ந்த ஏஜெண்டு மோகனா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது. இதில் குவைத்தில் உள்ள தமிழர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் முத்துக்குமரன் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சொந்த ஊரில் இன்று இறுதி சடங்கு
அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு முத்துக்குமரனின் உடல் வந்து சேருகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமரனின் உடல் கூத்தாநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு இறுதி ஊர்வம் நடக்கிறது. பின்னர் முத்துக்குமரனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடலை கூத்தாநல்லூருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம், முத்துக்குமரன் மனைவி வித்யா மனு கொடுத்தார். இதனையடுத்து கலெக்டர் விரைவான நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து முத்துக்குமரனின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு முத்துக்குமரன் மனைவி வித்யா மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.