ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் கைது

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-09-20 20:24 GMT

நெல்லை அருகே மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மகும்பல் கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் குறித்து தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலச்செவலை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன் (25), முப்பிடாதி (21), மாயாண்டி (22), நடுக்கல்லூரை சேர்ந்த பேச்சிமுத்து (22) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக விஜயகுமாரை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 நாட்களுக்கு பிறகு விஜயகுமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்