அரசு ஆஸ்பத்திரி லிப்டில் சிக்கி தவித்த 4 நோயாளிகள்-தீயணைப்பு துறையினர் மீட்டனர்
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென பழுதான லிப்டில் சிக்கி தவித்த 4 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென பழுதான லிப்டில் சிக்கி தவித்த 4 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
அரசு ஆஸ்பத்திரி
தென்காசியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து தினமும் 1,500 பேரில் இருந்து 2,000 பேர் வரை புற நோயாளிகளாகவும், சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பிரசவ வார்டில் தினமும் சராசரியாக 6 முதல் 10 வரையிலான குழந்தைகள் பிறக்கின்றன. இது தவிர எலும்பு முறிவு, கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.
4 பேர் சிக்கினர்
இந்த மருத்துவமனையில் சங்கரன்கோவிலை சேர்ந்த செல்வி (வயது 50), ஊத்துமலை தட்டப்பாறையை சேர்ந்த வள்ளியம்மாள் (50), கற்குடியை சேர்ந்த சுடலைமாடத்தி (65), வீரகேரளம்புதூர் மேலராஜகோபாலபேரியை சேர்ந்த முத்துலட்சுமி (48) ஆகியோரும் சிகிச்சை பெற்றனர்.
நோயாளிகள் 4 பேரும் நேற்று மதியம் முதல் மாடியில் உள்ள உள்நோயாளிகள் பிரிவிலிருந்து தரைதளத்திற்கு வந்து மருந்து மற்றும் உணவு பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் முதல் தளத்திற்கு `லிப்டில்' சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென `லிப்ட்' பழுதாகி பாதி வழியில் நின்று விட்டது.
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த லிப்டில் இருந்தவர்கள் செல்போன் மூலம் தங்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்வின் ஆகியோர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தென்காசி நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலர் கணேசன், வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துரிதமாகவும், திறமையாகவும் செயல்பட்டு லிப்டின் கதவை சிறிய கம்பி மூலம் உடைத்தனர். பின்னர் உள்ளே சிக்கி தவித்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
லிப்டில் இருந்தவர்கள் சுமார் 1 மணி நேரம் உள்ளே சிக்கி இருந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.