கோவையில் புதிதாக 4 போலீஸ் நிலையங்கள்

கோவையில் புதிதாக 4 போலீஸ் நிலையங்கள்

Update: 2023-05-26 18:45 GMT

கோவை,மே.27-

கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட 4 போலீஸ் நிலையங்களை தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

புதிய போலீஸ் நிலையங்கள்

கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதனை ஏற்று கோவை மாநகரில் கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே போலீஸ் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த போலீஸ் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

இந்த நிலையில் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தை நேற்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு உள்ள போலீசாரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

இதேபோல் சிட்கோ பகுதியில் சுந்தராபுரம் போலீஸ் நிலையம், கரும்புக்கடை போலீஸ் நிலையம் மற்றும் போத்தனூர் போலீஸ் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். நேற்று ஒரே நாளில் கோவை மாநகரில் 4 போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

போலீஸ் நிலையங்கள் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 1,352 போலீஸ் நிலையங்கள் இருந்தன. அதில் 202 மகளிர் போலீஸ் நிலையங்கள் மட்டும் தான் இருந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ்நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது 1,574 போலீஸ் நிலையங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளன.

கோவை மாநகரில் அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்பவத்தையடுத்து கோவை மாநகர காவல்துறையை விரிவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது புதிய போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. துடியலூர் மற்றும் வடவள்ளி போலீஸ் நிலையங்கள் தற்போது கோவை மாநகர காவல் துறையுடன் இணைய உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்கள் இருந்த நிலையில் 20 போலீஸ் நிலையங்களாக அதிகரித்துள்ளது.

செல்போன் செயலி

இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இக்குற்றங்களில் ஈடுபடுவோர் உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள் உள்ளவர்களாக இருந்தால் எளிதாக பிடித்து விடலாம். ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருந்தால் பிடிப்பது சிறிது சிரமமாக உள்ளது. காவல்துறை சார்பில் மக்களுக்காக 'காவல் உதவி' என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும். இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும்.

தமிழகத்தில் விரைவில் 130 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 1,030 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.

கரூர் சம்பவம்

கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்து விட்டார்.

இவர் அவர் கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சந்தீப், சுகாசினி, உதவி கமிஷனர் பசீனா பிவி, இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், தமிழரசு, ரத்தினகுமார், நடசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்