மேலும் 4 கஞ்சா வியாபாரிகள் கைது

தேனியில் சங்கிலித் தொடர் போல் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மேலும் 4 கஞ்சா வியாபாரிகளை போலீசார் ‘பொறி' வைத்து பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2023-03-10 19:00 GMT

கஞ்சா விற்பனை

தேனி அருகே கோடாங்கிபட்டி-போடேந்திரபுரம் சாலையில் கடந்த 7-ந்தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த கோடாங்கிபட்டியை சேர்ந்த சரஸ்வதி (வயது 55), மாணிக்காபுரத்தை சேர்ந்த அஜித் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோடாங்கிபட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி சந்திரா (60) என்பவரிடம் இந்த கஞ்சாவை வாங்கியதாக கூறினர்.

இதையடுத்து சந்திராவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். கஞ்சா எங்கிருந்து அவருக்கு கிடைத்தது என்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி சுமத்ரா (40) என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக கூறினார். இதனால், சுமத்ராவை 'பொறி' வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். சந்திராவை வைத்து சுமத்ராவிடம் போலீசார் பேச வைத்து, 4 கிலோ கஞ்சாவை கேட்க வைத்தனர்.

அடுத்தடுத்து சிக்கினர்

போலீசார் பிடியில் சந்திரா இருப்பது தெரியாமல், சந்திராவிடம் கொடுப்பதற்காக சுமத்ரா, அதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (45) என்பவருடன் 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தார். அப்போது அவர் வரும் வழியில் போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சுமத்ரா இந்த கஞ்சாவை காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி சாந்தி (60) என்பவரிடம் வாங்கியதாக கூறினார். பின்னர் சாந்தியை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து மனைவி அங்குத்தாய் (54) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார்.

இதனால், அங்குத்தாய் வீட்டுக்கு போலீசார் விரைந்தனர். அங்கிருந்த அங்குத்தாயை பிடித்து விசாரித்தனர். அவருடைய வீட்டில் சோதனையிட்ட போது அங்கு 8 கிலோ கஞ்சா இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் சுமத்ரா வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு மேலும் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

சங்கிலித் தொடர் போல், ஒவ்வொருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் மற்றவர்களை போலீசார் பிடித்தனர். ஒரே நாளில் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இந்த வழக்கில், சுமத்ரா, சாந்தி, அங்குத்தாய், ஆரோக்கியசாமி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து கடத்தி வர உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்