கிணத்துக்கடவு பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சப்-கலெக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு

கிணத்துக்கடவு பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சப்-கலெக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-04-04 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சப்-கலெக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

கலந்துரையாடல் கூட்டம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சி பகுதிகளுக்கு 295 கூட்டுக் குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டுகுடிநீர் ஆகிய 2குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிராம பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது கிணத்துக்கடவு பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடையும்போது அதை சீரமைக்க போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி தாமதம் ஏற்படுகிறது. இதனால் பல கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேலு மங்கை தலைமை தாங்கினார். பொள்ளாச்சி சப் -கலெக்டர் பிரியங்கா, பயிற்சி கலெக்டர் சவுமியா ஆனந்த், குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் செல்வராஜ், ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கிணத்துக்கடவு ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

தட்டுப்பாடு இன்றி குடி தண்ணீர்

கூட்டத்தில் கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசியதாவது:- கோடை தொடங்கி விட்டதால் பல ஊராட்சிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தொடங்கியுள்ளது. அதே போல் பல ஊராட்சிகளில் நீண்ட நாட்களாக நல்ல தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அந்தந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு தண்ணீரை வழங்கி வருகிறோம். ஒரு சில ஊராட்சி பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தடுக்க மீட்டர் பொருத்த வேண்டும் அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடி தண்ணீர் வழங்க தரைமட்ட குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழு அமைப்பு

இதுகுறித்து கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேலு மங்கை பேசியதாவது:-

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா தலைமையில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கொண்ட 4 குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் அந்தந்த பகுதியில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். மின்வாரியம் தொடர்பான புகார் குறித்து மனுக்களை கொடுங்கள் என ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வாங்கி சென்றார். இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர்பாஷா, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்