கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்
கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி,
புதுச்சேரியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சக்திவேல் (வயது 26). இவர் தனது நண்பர்களான திருச்சிற்றம்பலம்கூட்டுரோட்டை சேர்ந்த ரமேஷ் மகன் நரேஷ் (26), பார்த்திபன் (24), திண்டிவனம் அருகே நாகலாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சவுந்தராஜன் (26) ஆகியோருடன் காரில் சேலம் மாவட்டம் சென்னிமலையில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையோரத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சக்திவேல் உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.