4 வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி..!

கரூரில் 4 வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-26 09:35 GMT

கரூர்,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர்.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டது. 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், திமுகவினர் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 அதிகாரிகள் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்