காவிரி ஆற்றில் குளித்த 4 மாணவிகள் நீரில் மூழ்கி சாவு

கரூர் அருகே விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பியபோது காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2023-02-15 22:54 GMT

கரூர்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, பிலிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை இந்த பள்ளியில் 6, 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மகாலட்சுமி, ஆனந்தி, திவ்யதர்ஷினி, ரேணுகா, ேசாபனா, மற்றொரு ரேணுகா, மற்றொரு திவ்யதர்ஷினி, ஜனனி, கீர்த்தனா, ஏரெப்தா தங்க செமி, தீபிகா, தமிழரசி (வயது 13), சோபியா(12), இனியா(11), லாவண்யா(11) ஆகிய 15 மாணவிகள், ஆசிரியர்கள் திலகவதி, ஜெயசகாபியூன் ஆகியோருடன் ஒரு வேனில் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் வேனில் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டனர்.

காவிரி ஆற்றில் மூழ்கினர்

பிறகு அங்கிருந்த காவிரி ஆற்றில் 15 மாணவிகளும் இறங்கி சந்தோஷமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 பேரும் சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதைக்கண்ட சக மாணவிகள் கூச்சல் போட்டனர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரில் குதித்து மாணவிகளை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் 4 மாணவிகளும் நீரில் மூழ்கினர். இதையடுத்து மீதமுள்ள 11 மாணவிகளையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டனர். இதுகுறித்து கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

4 மாணவிகள் பிணமாக மீட்பு

உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காவிரி ஆற்றில் இறங்கி 4 மாணவிகளையும் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 4 மாணவிகளும் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிளை துரிதப்படுத்தினர்.

அப்போது இறந்த மாணவிகளின் உடல்களை பார்த்து சக மாணவிகள் கதறி அழுதனர். இதையடுத்து 4 மாணவிகளின் உடல்களையும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகத்தில் மூழ்கியது

விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகளில் 4 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து நேற்று மதியத்திற்கு மேல் பிலிப்பட்டி பள்ளிக்கும், அந்த ஊரில் உள்ளவர்களுக்கும் தகவல் வந்தது. இதனை கேள்விப்பட்டு, மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிலர் மயக்கம் அடைந்தனர்.

பலியான மாணவிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவிகள் பலியான செய்தி கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மேலும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

3 பேர் பணியிடை நீக்கம்

இதற்கிடையே பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி அஜாக்கிரதையாக இருந்ததற்காகவும், மாணவிகளை விளையாட்டிற்கு அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் செபா சகேயுன் இப்ராகிம், ஆசிரியை திலகவதி ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் என 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் உத்தரவிட்டார்.

மேலும் பள்ளியில் வகுப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்தனர்

இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயனூர் காவிரி ஆற்று பகுதியில் மாணவிகள் மூழ்கிய பகுதி குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும் என விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பொதுமக்களிடையே இடையே விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள், மாணவிகள் கதறி அழும் காட்சி மன வேதனை அளிக்கிறது. மீதமுள்ள 11 மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்