பஸ்நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக மதுகுடித்த 4 பேர் கைது

தினத்தந்தி செய்தி எதிரொலியாக பஸ்நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக மதுகுடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-20 16:48 GMT

வேலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் எப்போதும் இரு பஸ் நிலையங்களும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் பஸ்நிலையங்களில் பயணிகளுக்கு இடையூறாக மதுபிரியர்கள் மதுகுடித்து வந்தனர்.

இது பெண் பயணிகளை பெரிதும் அச்சுறுத்தியது. பயணிகள் மத்தியில் சகஜமாக மதுகுடிக்கும் நிலை இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதுதொடர்பாக தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி வேலூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் மதுகுடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு மது குடித்த வேலூரை சேர்ந்த சஞ்சய், சின்னா, நிவாஸ், நந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்