பழனி முருகன் கோவிலுக்கு ரூ.4 கோடி வருவாய்
உண்டியல் காணிக்கை மூலம் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.4 கோடி வருவாய் கிடைத்தது.
பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலும், உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையிலும் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 630 வருவாய் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 267 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 865 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 கிலோ (12,020) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.1 கோடியே 96 லட்சத்து 60 ஆயிரத்து 894-ம், தங்கம் 465 கிராம், வெள்ளி 4 கிலோ 812 கிராம் (4812), வெளிநாட்டு கரன்சிகள் 198-ம் கிடைத்தன. கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்றது. இதன் மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 14 லட்சத்து 12ஆயிரத்து 524 வருவாயாக கிடைத்தது. தங்கம் 1,330 கிராம், வெள்ளி 16 கிலோ 832 கிராம் (16,832), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 465-ம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
---------