ரூ.4¼ கோடியில் பாலம் அமைக்கும் பணி
சிதம்பரம் அருகே ரூ.4¼ கோடியில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே அம்மாபேட்டை உசுப்பூர் சந்திப்பில் கான்சாகிப் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலம் மிகவும் குறுகியதாக இருந்தது. மேலும் பாலமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி அந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.4 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக அங்கு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாபேட்டை உசுப்பூர், கடவாச்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ராஜாநகர் புறவழிச்சாலை வழியாக பல கிலோமீட்டர் தூரம் சுற்றி சிதம்பரம் நகருக்கு வந்து சென்று வருகின்றனர்.
நடவடிக்கை
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் கட்டிட பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி கான்சாகிப் வாய்க்கால் பாலத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.