ராட்சத அலையில் சிக்கி 4 படகுகள் கவிழ்ந்தன

ராட்சத அலையில் சிக்கி 4 படகுகள் கவிழ்ந்தன

Update: 2022-09-22 21:32 GMT

புதுக்கடை:

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை இனயம் மற்றும் தூத்தூர் மண்டல மீனவர்கள் தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

ஆனால் சரியான கட்டமைப்புடன் துறைமுகம் கட்டப்படாததால் துறைமுக முகத்துவார பகுதியில் ராட்சத அலையில் சிக்கி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்ற மீனவர் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்து பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும், துறைமுக சீரமைப்பு பணிகள் முடியும் வரை அங்கிருந்து மீன்பிடிக்க செல்லக்கூடாது என அரசு அறிவித்தது. இதனால், மீனவர்கள் பிற பகுதிகளில் இருந்து மீன்பிடித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் படகுகளில் சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அதில் ஒரு படகில் 2 மீனவர்கள் அரசின் தடை உத்தரவை மீறி துறைமுகத்துக்குள் வருவதற்காக முகத்துவார பகுதியில் வந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 2 மீனவர்களும் கடலுக்குள் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர்.

இதேபோல், மாலையில் சில படகுகள் முகத்துவார பகுதிக்குள் வந்தன. அப்போது, ராட்சத அலையில் சிக்கி 3 படகுகள் கவிழ்ந்தன. இதில் படகில் இருந்த மீனவர்கள் 6 பேர் கடலில் குதித்து நீந்தி கரை ேசர்ந்தனர்.

மீண்டும் முகத்துவார பகுதியில் படகுகள் கவிழ்ந்து அதில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்