கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த 4 கரடிகளால் பரபரப்பு
கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த 4 கரடிகளால் பரபரப்பு
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், குட்டிகளுடன் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா செல்லும் சாலையில் பகல் நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது. சாலையில் உலா வந்த கரடிகளை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு, அதை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சற்று நேரம் அந்த பகுதியில் உலா வந்த கரடிகள் பின்னர் அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், கிராம மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளின் நடமாட்டதைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.