ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது

கும்பகோணம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-01 20:27 GMT
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(வயது 40). ரவுடியான இவர் மீது கும்பகோணம் மற்றும் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புண்ணியமூர்த்தி கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டுக்கருப்பூர் வையாபுரி தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்

கடந்த 29-ந் தேதி காலை சத்திரம் கருப்பூரில் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு அருகில் இருந்த வாய்க்கால் மதகில் உட்கார்ந்து இருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் புண்ணியமூர்த்தியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தனிப்படை

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட புண்ணியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை பிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக கும்பகோணம் பைராகித்தோப்பை சேர்ந்த ரமேஷ் மகன் தமிழ்வாணன்(23), சேதுராமன் மகன் ஜீவானந்தம்(19), பரஞ்சோதி மகன் பிரகாஷ்(24) கொற்கையை சேர்ந்த செல்வம்(47) ஆகிய 4 பேரை கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வைத்து தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பைராகித்தோப்பை சேர்ந்த கதிரவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மகனை கொன்றதற்கு பழி தீர்த்த தந்தை

இந்த கொலைக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

கைதான செல்வம் மகன் மணிகண்டனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக, புண்ணியமூர்த்தி ஒரு முக்கியமான விசேஷத்திற்கு வா என அழைத்துச்சென்று கொலை செய்துள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனின் தந்தை செல்வம் புண்ணியமூர்த்தியை கொலை செய்ய திட்டம் வகுத்து சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தார்.

இந்த நிலையில் கருப்பூர் ரவுண்டானா பகுதியில் புண்ணியமூர்த்தி தனியாக இருக்கும் தகவல் தெரிய வந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்ற செல்வம், புண்ணியமூர்த்தியை வெட்டி கொன்றதாக தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்