திருப்புவனம் அருகே அண்ணன் குடும்பத்தினரே தொழிலாளியை அடித்து கொன்ற பயங்கரம்-4 பேர் கைது
திருப்புவனம் அருகே அண்ணன் குடும்பத்தினரே தொழிலாளியை அடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. இது ெதாடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்புவனம்
திருப்புவனம் அருகே அண்ணன் குடும்பத்தினரே தொழிலாளியை அடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. இது ெதாடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சொத்து விற்பனை
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த சின்ன வளையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் என 5 பேர் இருந்தனர்.
ராஜாமணிக்கு சொந்தமான 7½ சென்ட் இடத்தை ராஜாமணியின் 4-வது மகன் தொழிலாளியான மலைச்சாமி (வயது 45), 5-வது மகன் கண்ணன் (36) ஆகிய இருவரும் சேர்ந்து விற்பனை செய்து தந்தைக்கு மருத்துவ செலவு செய்துள்ளனர்.
இதனை அறிந்த ராஜாமணியின் மூத்த மகன் கோட்டுராஜா (60), தனது தாய் சின்னப்பொன்னுவிடம் சென்று எனக்கு தெரியாமல் எப்படி இடத்தை விற்பனை செய்தீர்கள்? என்று கேட்டு சண்டை போட்டு உள்ளார்.
அடித்துக்கொலை
இது குறித்து மலைச்சாமி, கண்ணனும் சேர்ந்து நேற்று அதிகாலை கோட்டுராஜா வீட்டிற்கு சென்று தாயாரை திட்டியது குறித்து கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோட்டுராஜா மற்றும் குடும்பத்தினர், எங்களுக்கு தெரியாமல் இடத்தை விற்றுவிட்டு எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களா? என அவதூறாக திட்டியதோடு கையில் வைத்திருந்த அரிவாள், இரும்பு குழாய், உருட்டுக்கட்டை, கத்தி ஆகியவற்றால் இருவரையும் தாக்கியுள்ளனர்.
மலைச்சாமியை நைலான் கயிற்றால் கட்டி போட்டு அரிவாளால் வெட்டியும், கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதில் தப்பி ஓடிய கண்ணன் தனது காயத்துக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சின்னவளையங்குளம் கிராமத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மலைச்சாமியின் உடலை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேர் கைது
மேலும் இச்சம்பவம் குறித்து சிகிச்சை பெற்று வரும் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டுராஜா, அவரது மகன்கள் கருப்புராஜா (32), அழகுராஜா (36), கோட்டுராஜாவின் மனைவி இந்திராகாந்தி (53) ஆகிய 4 பேர் மீதும் திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இது தொடர்பாக மானாமதுரை துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.