பெண்ணை தாக்கிய 4 பேர் கைது
போலீஸ் நிலையம் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் வசந்த நகர் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த நாகராஜன் மகள் சுவாதி(வயது 26). இவருக்கும், வண்ணாங்குண்டை சேர்ந்த சுப்பையா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுத்து விட்டனராம். இந்த நிலையில் சுவாதி, சுப்பையாவுடன் அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சுவாதியின் உறவினர்கள் அவரை போனில் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுவாதி ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் விசாரணைக்காக வந்த சுவாதியை, போலீஸ் நிலையம் அருகே அவரது உறவினர்களான சோனைமுத்து மனைவி பசுபதி(38), இவரின் மகள் கமலி(24), அமுதா(47), சுவாதியின் தாய் மங்களேசுவரி(52) ஆகியோர் தாக்கினர். இதுகுறித்து சுவாதி கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.