நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல்நீர் சுத்திகரிப்பு 3-வது ஆலை

நெம்மேலியில் ரூ.4 ஆயிரத்து 276 கோடியில் கடல்நீரை சுத்திகரித்து தினமும் 40 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் 3-வது ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Update: 2023-08-09 21:52 GMT

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரில் தாம்பரம் மாநகர் மற்றும் சென்னை பெருநகர் பகுதியில் உள்ள 36 இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் தினமும் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிய குடிநீர் ஆலை அமைப்பதற்கான இடம் பேரூரில் தேர்வு செய்யப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் மேடு பள்ளங்களாக உள்ள இடங்களை சமன்படுத்தும் பணிகள் நடக்கிறது.

அமைச்சர் ஆய்வு

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் இடம் சமன்படுத்தும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் திப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் (15 கோடி லிட்டர்) திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையகட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது. கடல்சார் பணிகள், எந்திரவியல் மற்றும் மின்சார கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் கடல்நீரை நிலையத்திற்கு உள்கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் வடிகட்டப்பட்ட கடல்நீர்த்தேக்க தொட்டி, கடல்நீர்உந்துநிலையம் போன்றவற்றையும் அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் திறக்கப்படும் இந்த புதிய குடிநீர் ஆலையின் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

21-ந்தேதி அடிக்கல்

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

ரூ.4,276 கோடியில் தொடங்கப்பட உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு 3-வது ஆலை திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி நெம்மேலி பேரூர் பகுதிக்கு வந்து அடிக்கல் நாட்டுகிறார். திட்டப்பணிகளை 42 மாதங்களில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ள 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் 2-வது புதிய ஆலையை செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் வடிகால் பணிகளை முதல்-அமைச்சரே நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லேஷ்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்