3-வது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்

கூடலூர் மக்களின் தேவைக்காக மூலக்காட்டில் இருந்து 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-07-26 21:15 GMT

கூடலூர்

கூடலூர் மக்களின் தேவைக்காக மூலக்காட்டில் இருந்து 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

வளர்ச்சி பணிகள்

கூடலூர் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மணிப்பூர் கலவரத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றது.

சையத் அனூப்:- ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்து கூறுகின்றனர். பின்னர் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், வார்டுகளில் பணி நடைபெறுவதில்லை. மேலும் நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தவருக்கு சுகாதார பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு தன்னிச்சையாக ஒப்பந்தம் வழங்கக்கூடாது. இக்கருத்தை பெரும்பாலான கவுன்சிலர்கள் வரவேற்றனர்.

3-வது குடிநீர் திட்டம்

ஆணையாளர்:- இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனலட்சுமி:- எனது வார்டில் தடுப்புச்சுவர்கள் இல்லாததால் சாலைகளில் மண் சரிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, தடுப்புச்சுவர்கள் கட்ட வேண்டும்.

சத்தியன்:- வார்டுகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் புதர் மண்டி காணப்படுகிறது. அதை அகற்ற வேண்டும்.

ஜெயலிங்கம்:- மில்லிக்குன்னு செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்மல்:- சில்வர் கிளவுட் பகுதியில் பஸ் நிறுத்துமிடத்தில் பயணிகள் நிழற்குடை மோசமாக உள்ளது. எனவே, புதியதாக கட்ட வேண்டும்.

வெண்ணிலா:- ஓவேலி செல்லும் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். கூடலூர் மக்களின் தேவைக்காக ஓவேலி மூலக்காட்டில் 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்.

மதிப்பூதியம்

ஆணையாளர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டா நிலத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாமல் இருந்தால் கவுன்சிலர்கள் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னர் தலைவர், துணைத்தலைவர் உள்பட அனைத்து கவுன்சிலர்களுக்கும் மதிப்பூதியத்தை ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழக அரசுக்கு கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர். கூட்டத்தில் நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை, நகராட்சி தேர்தல் உதவி அலுவலர் சம்பத்குமார் உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்