மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 391 மனுக்கள் பெறப்பட்டன

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 391 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-04-10 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 391 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.5,350 வீதம் 40 பேருக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் எந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 6 கல்லூரி விடுதிகள் மற்றும் 29 பள்ளி விடுதிகள் என மொத்தம் 35 விடுதிகளின் மாணவர்களிடையே நடந்த நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் சி.பழனி வழங்கினார். முன்னதாக, திண்டிவனம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் சாலை விபத்தில் உயிரிழந்ததையொட்டி அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்