கோவையில் 387 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடும்ப வன்முறை வழக்கு
இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தங்கமணி கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப வன்முறைகள் தொடர்பாக 365 வழக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை 387 வழக்குகள் பதிவாகி உள்ளன. கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் குடும்ப வன்முறையாக மாறி விடுகிறது. இது அதிகரித்து வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
சிதைக்கும் சாதனமாக செல்போன்
தற்போது உள்ள கணவன்-மனைவி இடையே போதிய புரிதல் இல்லாததால் சிறிய பிரச்சினைகளுக்கும் பிரிவு ஒன்றே தீர்வாக நினைத்து வழக்குப்பதிவு செய்கின்றனர். குறிப்பாக இன்றைய இளம் பெண்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருப்பதில்லை. தற்போதைய தலைமுறையினரை சிதைக்கும் சாதனமாக செல்போன் உருவெடுத்து உள்ளது.
குடும்ப வன்முறை வழக்குகள் ெதாடர்பாக கோர்ட்டு சார்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது. ஆனாலும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 60 முதல் 70 சதவீதம் பேர் பிரிந்து செல்வதாகவே தெரிவிக்கின்றனர்.
புரிதல் இல்லை
கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே உரிய புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை சுமுகமாக எடுத்துச்செல்ல முடியும். அதனை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.