கேரளாவிற்கு லாரியில் ஏற்றி சென்ற 37 மாடுகள் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மீட்பு
கேரளாவிற்கு லாரியில் ஏற்றி சென்ற 37 மாடுகள் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மீட்கப்பட்டது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் சுங்கச்சாவடி வழியாக நேற்று காலை 10 மணியளவில் மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. சுங்கச்சாவடியில் இதனை கண்ட நாம் இந்துக்கள் கட்சியினர் அந்த லாரியை மறித்து, மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் லாரி டிரைவரான திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சின்னதுரையிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், 37 மாடுகளை ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ஒரே லாரியில் ஏற்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் மாடுகளை மீட்ட போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.