காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 36 பேர் காயம்

இறைவன்காடு மற்றும் காவனூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். வாலிபர் ஒருவரை மாடு இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-27 17:39 GMT

காளை விடும் திருவிழா

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த இறைவன் காடு கிராமத்தில் செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் சுதா, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி குமரவேல், ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சீதா சதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, விழாக் குழுவினர் கணபதி, ரவி, சேகர், வேலாயுதம் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து பொய்கை கால்நடை மருத்துவர் மயிலா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் 197 காளைகளை பரிசோதனை செய்து 187 காளைகள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளித்தனர். இதனையடுத்து ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஓடியது.

மாடுகள் முட்டி காயம்

காளைகள் ஓடும் தெருவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நின்று கொண்டு காளைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். அப்போது குறுக்கே நின்றிருந்த இளைஞர்களை மாடுகள் முட்டு தள்ளிவிட்டு ஓடின. மாடுகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு டாக்டர் தீபிகா தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதல் பரிசாக ரூ.60 ஆயிரத்து ஒன்று, இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரத்து ஒன்று, மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரத்து ஒன்று என மொத்தம் 51 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவை போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணித்தனர்.

காவனூர்

கே.வி.குப்பம் தாலுகா காவனூர் கிராமத்தில் மாடு விடும் விழா நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம், என மொத்தம் 115 பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 174 மாடுகள் பரிசோதனைக்குப் பின் போட்டிகளில் பங்கேற்றன. மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, தாசில்தார் அ.கீதா, தலைமை இடத்து துணை தாசில்தார் அ.பிரகாசம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராமநிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மா ஸ்ரீதர், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் போட்டிகளை கண்காணித்தனர்.

பரபரப்பு

சிறிப் பாய்ந்து ஓடியபோது மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 2 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டனர். 14 பேர் அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். காளைகள் பாய்ந்து சென்றபோது தவறி விழுந்ததில் 5 மாடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது ஒரு காளை வாலிபர் ஒருவர் மீது மோதியது. இதில் சிக்கிய அவரை சிறிது தூரம் இழுத்து சென்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

லத்தேரி எல்.எம்.பாபு என்பவரின் ஆர்.எக்ஸ் 100 என்ற மாடு முதல் பரிசு பெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்