திண்டுக்கல்லில் 350 கிலோ இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல்லில், தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 350 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-10-02 19:45 GMT


இறைச்சி விற்க தடை



காந்தி ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வதை செய்து அவற்றின் இறைச்சியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக இறைச்சி கடை வியாபாரிகளுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டிருந்தது.


இருந்தபோதிலும் காந்தி ஜெயந்தி தினமான நேற்று தடையை மீறி திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் இறைச்சி விற்பனை படுஜோராக நடப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு புகார் வந்தது. இதையடுத்து இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.


350 கிலோ பறிமுதல்


அதன்படி மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், சுரேஷ்குமார், சத்தியசுந்தரராஜ் மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல் தெற்கு ரதவீதி, ஆர்.எம்.காலனி, திருச்சி சாலை ஆகிய இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது தடையை மீறி சில கடைகள் திறக்கப்பட்டு ஆடு, கோழி இறைச்சி விற்பனை நடப்பது தெரியவந்தது.


இதையடுத்து அந்த கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 350 கிலோ ஆடு, கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றின் மீது கிருமிநாசினியை தெளித்த அதிகாரிகள், மீண்டும் அவை விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதே பகுதியில் குழி தோண்டினர். பின்னர் அந்த குழிக்குள் இறைச்சியை போட்டு மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இறைச்சிக்கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.


இதேபோல் பழனி பகுதியில் இறைச்சி விற்பதை தடுக்க நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி காந்தி மார்க்கெட், புதுதாராபுரம் ரோடு, இட்டேரி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 20 கடைகளில் கோழி, ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி மொத்தம் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்